பள்ளிக் கல்வி முடிக்கும் மாற்றுத்திறனாளிகள் 9 சதவீதம்!
நாட்டில் மாற்றுத்திறன் குழந்தைகளில் 9 சதவீதம் பேரே பள்ளிக் கல்வியை முடிக்கின்றனர் என, காந்தி கிராம பல்கலை மனையியல்துறை தேசிய கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
காந்தி கிராம பல்கலை மனையியல்துறை சார்பில், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் வளர்ச்சிப் பணிகளில் ஏற்படும் சவால்களும் கவனிப்புகளும் எனும் தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடந்தது. தலைமை வகித்த துணைவேந்தர் நடராஜன் பேசியதாவது: சமூகத்தில் எளிதில் பாதிப்பிற்கு உள்ளாகும் பிரிவினரில் மாற்றுத்திறன் குழந்தைகள் குறிப்பிடத்தக்கவர்கள். மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான குறைபாடு 2 வகையில் ஏற்படும். ஒன்று உடல் சார்ந்தது. மற்றொன்று மனம் சார்ந்தது. ஏழு வயது வரை உள்ள குழந்தைகளே உடல், மனம் சார்ந்து அதிகம் பாதிப்படைகின்றனர்.
மாற்றுத்திறன் குழந்தைகளில் 9 சதவீதம் பேரே பள்ளியில் சேர்க்கப்படுகின்றனர். மூன்று சதவீதம் பேர் கல்வியை தொடர முடியாமல் இடையில் நின்றுவிடுகின்றனர். 6 சதவீத பேர்தான் பள்ளிக்கல்வியை நிறைவு செய்கின்றனர். திட்டமிட்டு செயல்பட்டால் மாற்றுத்திறன் குழந்தைகளையும், ஏனைய குழந்தைகளுக்கு இணையாக வளர்ந்தெடுக்க முடியும். அரசு இதற்கு ஊக்கவிக்க வேண்டும். இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் அமைப்புக்களை வலுப்படுத்தி மாற்றுத்திறன் குழந்தைகளை மேம்படுத்த வேண்டும், என்றார்.
தேசிய மாற்றுத்திறனாளிகள் வளர்ச்சி கழக இயக்குனர் ஹிமாங்சூதாஸ், காந்திகிராம முன்னாள் துணைவேந்தர் பங்கஜம், ஒருங்கிணைப்பாளர் கவிதா, மருத்துவர்கள் ரீட்டாமேரி, நம்மாழ்வார் பங்கேற்றனர்.